குளோபல் தமிழ் செய்தியாளர்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி தென் கொரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். தென் கொரியாவின் பியோங்ஹாங் ( Pyeongchang) கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரை கண்டு களிக்கும் நோக்கில் வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ-ஜொங் ( ( Kim Yo-jong ) இந்த பயணத்தினை மேற்கொள்கின்றார்.
ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தென்கொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வில் இரு நாடுகளினதும் வீர வீராங்கனைகள் ஒரே கொடியின் கீழ் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சுமூகமடைய இந்த ஒலிம்பிக் போட்டி வழியமைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், பிரச்சார நோக்கிற்காகவே வடகொரியா இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜொங் உல்லின் இளைய மகளாக கிம் யோ-ஜொங் கருதப்படுகின்றார். தற்போதைய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை விடவும் நான்கு வயது இளையவர் எனவும், இந்த சகோதரியே ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.