Home இலங்கை வெற்றி பெற்றாலும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை பறிபோகலாம்?

வெற்றி பெற்றாலும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை பறிபோகலாம்?

by admin

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக காவற்துறைப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர  தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்ட விதிகளை மீறிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த 62 வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் இவர்களை குற்றவாளிகளென நிரூபிக்கும் பட்சத்தில் இவர்கள் தேர்தலில் வெற்றிப் பெற்றிருந்தாலும் இவர்களுடைய உறுப்புரிமை இரத்துச் செய்யப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாதென்றும் அவர் கூறினார்.

காவற்துறை தலைமையகத்தில்  நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு

கருத்து தெரிவித்த அவர், “எந்தவொரு வேட்பாளரும் தற்போது சிறையில் இல்லை. சில ஆதரவாளர்கள் மட்டுமே தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளனர். இவர்களால் இன்று தேர்தலில் வாக்களிக்க முடியாது .” எனவும் தெரிவித்தார்.

“இலஞ்சம் கொடுத்தல், பலவந்தம் செய்தல், அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே 62 வேட்பாளர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கெதிராக தண்டனை கடுமையாக அமையலாம்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட கடந்த 09 ஆம் திகதி முதல் நேற்று வரை தேர்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 640 முறைப்பாடுகள் காவல் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. இதில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலேயே ஆகக்கூடுதலான 158 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இம்முறைப்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 136 பேரில் 25 பேர் வேட்பாளர்கள்.

இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக  191 சுற்றிவளைப்புக்களை  காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இதில் சுவரொட்டிகள் காட்சிபடுத்தியமை தொடர்பாகவே 127 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள 372 பேரில் 37 பேர் வேட்பாளர்களென்றும் அவர் கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More