குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வாள் வெட்டுக்குழுவுடன் இணக்கத்திற்கு செல்லுங்கள். – பொலிஸார் கட்டப்பஞ்சாயத்து…..
வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய குழுவுடன் இணக்கப்பாட்டுக்கு செல்லுமாறு காவற்துறையினர், தம்மை வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள். தெரிவித்துள்ளனர். யாழ்.கொட்டடிப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் சகோதர்களான சந்திரகுமார் லோஜிபன் மற்றும் சந்திரகுமார் ஜீவராசா ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் சிவில் உடையில் சென்ற காவற்துறையினர், இரண்டு லட்ச ரூபாய் பணம் இழப்பீடாக பெற்று தருகின்றோம். இணக்கப்பாட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,
கொட்டடி கண்ணாபுரம் பகுதியால் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சகோதரியை அழைத்து சென்றுகொண்டிருந்த போது வீதியில் நின்ற இளைஞர்கள் குழு எனது சகோதரியுடன் சேட்டை விட்டனர். அதனை தட்டிக்கேட்ட போது எமக்கு இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்ட போது என் மீது இளைஞர்கள் வாள் வெட்டு தாக்குதலை நடத்தினார்கள். அதனை கேள்வியுற்று சம்பவ இடத்திற்கு வந்த எனது சகோதரன் மீதும் வாள் வெட்டு தாக்குதலை நடத்தினார்கள்.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட போது தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து மறுநாள் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தம்மை சிவில் உடையில் சென்ற காவற்துறையினர் பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், வாள் வெட்டு கும்பலுடன் இணக்கத்திற்கு செல்லுமாறும், அவர்களிடம் இருந்து இழப்பீடாக 2 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று தருவதாகவும் கூறினார்கள் .
நாம் அதற்கு இணங்காமல் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.
ஆனால் இதுவரையில் (நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை) சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் காவற்துறையினர் கைது செய்யவில்லை என மேலும் தெரிவித்தனர்.