அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் கந்தையா நீலகண்டன் அவர்கள் காலமானார். திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபையின் தலைவராகவும் பணியாற்றிய இவர் 43 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றும் இலங்கையின் மிகவும் பிரபலமான சட்டத்தரணிகளில் ஒருவராகவும் விளங்கியிருந்தார்.
அத்துடன் இலங்கை அரசு நியமித்திருக்கும் Special Presidential Task Force on Reconciliation எனும் இனப்பிரச்சனைக்கு இணக்கம் காணும் குழிவின் உறுப்பினராகவும் அங்கத்துவம் வகித்திருந்தார். இலங்கையின் இந்துக்களின் உரிமைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பிலும் அக்கறை கொண்டு அவை தொடர்பில் தனது கருத்துக்களையும் அக்கறைகளையும் வெளியிட்டு வந்தவர்.
இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருவதாகவும் இந்தநிலையில் அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்திடம் தங்களின் பிரச்சனைகளை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் சேர் பொன் இராமநாதன் இன்று இருந்திருந்தால் இனத் துரோகியாக பார்த்திருப்பார்கள். சேர் பொன் இராமநாதனை நினைத்து அஞ்சலி செய்கின்ற வேளையில் எம்மை நினைத்து நாம் கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலகத்தில் நடந்த பொன் இராமநாதன் நினைவுதின நிகழ்வில் கந்தையா நீலகண்டன் கூறியிருந்தார்.
இலங்கையின் பேரினவாத மத நடவடிக்கைகளை கண்டித்திருந்ததுடன், சிறுபான்மையின சமயங்களில் ஒன்றான இந்து மத உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். சமய நிகழ்வுகளுக்கு அப்பால் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவிகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி உதவிகள் என்பவற்றையும் இந்து மா மன்றத்தின் மூலம் முன்னெடுத்திருந்தார்.