குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிறுமியை வன்புணர்ந்து தாயாக்கிய சகோதர முறையானவருக்கு இருபது ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த தனது சித்தியின் மகளான (தங்கை முறை) 14 வயதுடைய சிறுமியை சகோதர முறையிலான குடும்பத்தலைவர் பாலியல் வன்புணர்வுக்கு இரண்டு தடவைகள் உட்படுத்தி சிறுமியை தாய்மை அடைய செய்துள்ளார்.
சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குடும்பத்தலைவர் பருத்தித்துறை காவற் துறையினரால் கைது செய்யப்பட்டு , பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , அங்கு சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள் சட்டமா அதிபதி திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டன. அத்துடன் சந்தேக நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அந்நிலையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை இரண்டு தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என தனித்தனியே இரண்டு குற்ற சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு யாழ்.மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் , நடைபெற்று வந்தது.
அதன் போது எதிரி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி , ” தங்கை முறையான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமைக்காக தற்போது எதிரி மனவருத்தம் அடைகிறார். அவர் தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்ற சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்கின்றார். அத்துடன் எதிரி 5 பிள்ளைகளின் தந்தை ஆவார். எனவே அவரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு எதிரிக்கு குறைந்த பட்ச தண்டனையை வழங்க வேண்டும் என மன்றில் கருணை விண்ணப்பம் செய்தார்.
எதிரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் , தங்கை முறையான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி தாய்மை ஆக்கியுள்ளார். அதனால் அந்த சிறுமிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. அத்துடன் எதிரி குறித்த குற்றத்தை புரியும் போது , சட்டமுறையான திருமணத்தின் ஊடாக 3 பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்துள்ளார்.
எதிரி புரித்துள்ள குற்றத்திற்கு 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்க முடியும். எனவே எதிரிக்கு அதி கூடிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மேல் நீதிபதி தங்கை முறையான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி தாய்மையடைய செய்தமைக்காக 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. எதிரி அதே குற்றத்தை மீளவும் புரிந்தமைக்காக அதற்கும் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் எதிரி அனுபவிக்க முடியும்.
மேலும் பதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதனை வழங்க தவறின் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். தண்டமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட வேண்டும். அதனை செலுத்த தவறின் 2 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனை தீர்ப்பையளித்தார்.