சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அரசு ஆதரவு படைகள் கடுமையான தாக்குதல் மேற்கொண்டுவரும் நிலையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா பாதுகாப்பு பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறான ஒரு மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.
மேலும் உயிரிழந்தவர்களில் பெருமளவிலானவர்கள் 15 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், மருத்துவம் மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு பேரவை நேற்று ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளது. இதனை அடுத்து போர் நி்றுத்தம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, தற்காலிக முகாம்கள் அமைப்பது போன்ற பணிகள் இந்த 30 நாட்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த போர் நிறுத்தமானது ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான யுத்தத்துக்குப் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.