சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு பேரவை அனுமதி வழங்கியும் அரச ஆதரவு படைகள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் கடுமையான வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின்னர் இத்தகையதொரு மோசமான தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படடுள்ளது.
சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இடம்பெற்று வருகின்ற மோசமான இந்த வான் தாக்குதல்களில் சிக்கி 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. மேலும் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார்கள் எனத் தெரிவித்த ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் மருத்துவம் மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு பேரவை நேற்று முன்தினம் ஆதரவு வழங்கியிருந்ததனை அடுத்து போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது. எனினும் போர் நிறுத்த தீர்மானத்தை கவனத்தில் கொள்ளாது கிழக்கு கூட்டா பகுதியில் அரச ஆதரவு படைகள் தொடர்ந்து வான் தாக்குதல்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதல்களின் போது இரசாயன தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் நிலைமை மிக மோசமாகக்கூடும் என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
அதேவேளை சிரியாவின் கிழக்கு கூட்டாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருமாறு, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானிலுள்ள சென். பீற்றர் சதுக்கத்தில் நடைபெற்ற ஆராதனையின் பின்னர், அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.