நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடிவருகின்றது. முதலாவது போட்டியில் நியூசிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பினை தேர்ந்தெடுத்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 223 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து 224 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 37.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்களைப் பெற்று ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இரு அணியினரும் தலா ஒரு போட்டியில் வென்று தொடரை 1-1 என்ற நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது