|
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் விசாரணைக்காவலில் விசாரித்த இந்திய உளவுத்துறை இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது. அத்துடன் மேலும் 5 நாட்கள் காவலில் தடுத்து வைத்து அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் நேற்று சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார்
இதற்காக கார்த்தி சிதம்பரம் தனது அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி,வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.