கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த 2 நிறுவனங்களின் 38 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதுரை மேலூர் மற்றும் கிழக்கு பகுதியில் செற்பட்டு வந்த சுமார் 194 தனியார் கிரானைட் குவாரிகளில் பெரும்பாலானவை அரசின் விதி முறைகளை மீறியும், அரசு நிலங்களை ஆக்கிரமித்தும் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விதிமுறை மீறலில் ஈடுபட்ட 84 குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்த தமிழக அரசு இந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவும் செய்திருந்தது.
இந்தநிலையில் இரு நிறுவனங்கள் மதுரை சுற்றுப்புற பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல்வேறு வண்ணங்கள் கொண்ட கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், கிரானைட் கற்களை விதிமுறைகளை மீறி கனரக இயந்திரங்கள் ; மூலமும் அதிக சக்தி கொண்ட வெடிகள் மூலம் தகர்த்து எடுத்ததாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது இது தொடர்பாக இந்த 2 நிறுவனங்கள் மீதும் மதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் இந்த 2 நிறுவனங்களின் மீதும் குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்த நிலையில் குறித்த 2 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குமாறு தமிழக காவல்துறை, அதுலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களினதும் சொத்துக்களை அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது