நடிகர் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தயாரிப்பாளர் தாணு வழங்கியிருந்தார். பைரவி படம் வெளியானது முதல் இந்த பட்டத்தை அவருக்கு தமிழ் திரையுலகம் தொடர்ந்து கொடுத்தே வந்தது. பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும், குறிப்பாக, 1990களில் இருந்து பாபா வரை தொடர்ந்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படங்களை மட்டுமே அவர் கொடுத்து வந்ததால் இந்த பட்டத்திற்கு வேறு யாரும் போட்டி கூட போட முடியாத நிலை இருந்தது.
பாபாவுக்கு பிறகு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரீமேக் படமான சந்திரமுகியில் நடித்த அவர் பின்னர் நடிப்பில் மாற்றத்தை கொண்டுவந்தார். அத்துடன் கோச்சடையான், குசேலன் போன்ற புதுமுயற்சிகளை எடுத்த நிலையில் கபாலி பேசப்பட்ட ஒரு படமாக மாறியது.
இந்த நிலையில்தான், தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் இப்போது வெறும் நடிகராக மட்டுமின்றி அரசியல் கட்சி பிரமுகராகவும் மாறியுள்ளார்.
எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அரசியல் பிரமுகர் என்ற வகையில் அவரிடம் ஊடகங்கள் கருத்து கேட்க ஆரம்பித்துள்ளன. டுவிட்டர் பக்கத்தில் இருந்த தனது பெயரை மாற்றியுள்ளார். 2014ல் டுவிட்டரில் அவர் கணக்கு துவங்கியபோது, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்- @superstarrajini – என்பதே அவரது பெயராக இருந்தது. அதை இப்போது, @rajinikanth என மாற்றியுள்ளார்.
அரசியலுக்கு வந்துள்ள நிலையில், தானும் ஒரு சாமானியர் என்பதை போல தொண்டர்களுக்கு காண்பிக்கவும், சூப்பர் ஸ்டார் என்பது சினிமாவுக்கான பட்டம், நான் இப்போது அரசியல்வாதி என்பதை அழுத்தமாக பதிய வைக்கவும் ரஜினிகாந்த் இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகின்றது.பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராமில் ரஜினிகாந்த் நேற்று முதல் கணக்கு ஆரம்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது