பாஜகவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மாநிலத்துக்கான தனிக் கொடியை அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக அரசு, அம்மாநிலம் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ம் திகதியன்று அரசு நிகழ்வுகளில் மஞ்சள் சிவப்பு கொடியை பயன்படுத்தி வந்தது. மேலும் அந்தக் கொடியை கர்நாடக மாநிலத்தின் கொடியாக அறிவிக்க வேண்டும் என கன்னட அமைப்பினர் கோரி வந்தனர்.
முதலமைச்சர் சித்தராமையா உருவாக்கிய 9 பேர் கொண்ட வல்லுநர் குழுவினால் உருவாக்கப்பட்ட இந்தக் கொடி தொடர்பான பரிந்துரை அறிக்கை கடந்த மாதம் கர்நாடக அரசின் கன்னட கலாச்சாரத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியான பாஜக நாட்டில் மாநிலங்களுக்காக தனிக் கொடி உருவாக்க தேவை இல்லை. இது தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தின் தனிக் கொடியை சித்தராமையா நேற்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த கொடியின் மேல் பகுதி மஞ்சள், நடுவில் வெள்ளை, கீழே சிகப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொடி குறித்து தகவலை மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்து, உரிய ஒப்புதலுடன் பயன்படுத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.