சமூக வலைத்களங்களில் உண்மையைவிட பொய்யான செய்திகளே மிக விரைவாக பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த ஆய்வுக்காக 2016-17 ஆண்டு காலப்பகுதியில் 1,26,000 பேரின் டுவிட்டர் கணக்குகள் கண்காணிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மக்கள் உண்மையான செய்தியை விட பொய்யான செய்தியை அதிகமாக நம்புகின்றனர் எனவும் இதனால் அவர்கள் பொய்யான செய்தியை சமூக ஊடகங்களில் மிக விரைவாக பகிர்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு உண்மையான செய்தி பகிரப்படும் நேரத்தில் 6 பொய்யான செய்திகள் பரவிவிடுகின்றன எனவும் உண்மையை விட பொய் செய்திகள் 70 சதவீதம் அதிகமாக பகிரப்படுகின்றன எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக மக்கள் புதிய மற்றும் வித்தியாசமாக செய்திகளை விரும்புகின்றனர் எனவும் பொய்யான செய்திகள் அவர்களின் ஆவலை தூண்டுகின்றன எனவும் அதனால் வருகின்ற செய்தி உண்மையா, பொய்யா என்பதை ஆராயாமல் அதனை பகிர்ந்து விடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இது போன்ற பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்க டுவிட்டர் நிறுவனம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது