ரஸ்ய முன்னாள் உளவாளி மற்றும் அவருடைய மகள் ஆகியோர் ரஸ்யாவால் உருவாக்கப்பட்ட நரம்பு மண்டலங்களை பாதிக்கக் கூடிய இரசாயனத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் என பிரித்தானிய பிரதமர் தெரசோ மே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை ரஸ்யா நடத்தியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இதற்கான பொறுப்பை ரஸ்யா ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தமது நாட்டுக்கு எதிரான ரஸ்ய அரசின் நேரடி தாக்குதலாக இருக்கலாம் அல்லது வேறொரு நபருக்கூடாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான விரிவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரித்தானியா தயாராக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் ரஸ்யாவிடமிருந்து போதிய விளக்கம் வரவில்லை எனில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4ஆம் திகதி ரஸ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பால் என்பவரும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும் பிரித்தானியாவின கலிஸ்பரி; பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.