குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்பட்ட பின்னர் நாட்டுக்குள் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வாக்களித்தால், அது நல்லாட்சி அரசாங்கத்தின் முடிவாக அமையும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவின்றி ஐக்கிய தேசியக்கட்சியும் அதற்கு ஆதவான சிறிய கட்சிகளும் இணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றால், அது ஐக்கிய தேசியக்கட்சியின் தனியான அரசாங்கத்தை அமைக்க வழியை ஏற்படுத்தும்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்விடைந்தால், தாம் அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலக போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியடைந்தால், அதன் மூலமான கடுமையான பாதிப்பை ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக்கட்சியுமே எதிர்நோக்க நேரிடும்.
அப்படியான நிலைமை ஏற்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து புதிய பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்கும் என கூறப்படுகிறது. அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதை தவிர்க்க, அமைச்சர்கள் சிலர் அன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.