வடமாகாணத்தின் கடந்த கால அசாதாரண யுத்த சூழலில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த நடவடிக்கை எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
“எமது துரித நோக்க சிந்தனையின் அடிப்படையில் இவ்வாறான செயற்பாட்டுக்கு நமது அரசாங்கம் முக்கியத்துவத்தினை வழங்கியிருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வடுக்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில், மிக கூடிய அளவில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், மறுவாழ்வுக்கு உட்படுத்த வேண்டியவர்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக சமூக ரீதியான முன்னேற்றத்தினை அவர்களின் வாழ்க்கைக்கான தொழிற்துறையினையும் முன்னேடுக்க அரசாங்கம் துரித கவனம் செலுத்தியுள்ளது. அதற்காகவே நாம் இவ்வாறான ஒரு துரித வேலைத்திட்டத்தினை முன்னேடுத்துள்ளோம். எனவே அவ்வாறான செயற்றிட்டத்திற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலம் மற்றும் ஐனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டத்தினை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (01) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஐித் குமாரசுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த அங்குராப்பணநிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கில் முன்னேடுக்கப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்கான அடிப்படை தேவைக்கான செயற்பாடுகள் எதிர்வரும் காலத்தில் நல்லிணக்க அமைச்சினால் முன்னேடுக்கவுள்ள செயற்பாடுகள் பற்றியும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
இங்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் செயலாளர் ஹெட்டிராட்சியா, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான தமிழ் மொழிக்கான இணைப்பாளர் துர்க்கா கேதீஸ்வரன் மற்றும்அமைச்சின் உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.