குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனைக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
கூட்டு எதிர்க்கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற ஆதரவளிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் பசில் ராஜபக்ச இருந்து வருவதாக கூறப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பசில் போதிய ஆதரவை வழங்கவில்லை எனவும் இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவத்தை வழங்கும் அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விடயத்தில் எந்த உதவிகளையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அரசாங்கத்தை அடுத்த இரண்டு வருடங்கள் நடத்திச் செல்ல பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பசில் ராஜபக்ச இருந்து வருகிறார். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியை தொடரவிட்டால், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் அடுத்த பொதுத் தேர்தல் ஒன்றில் கூட்டு எதிர்க்கட்சி இலகுவாக வெற்றி பெற முடியும் எனவும் பசில் ராஜபக்ச கருதுவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச. ஐக்கிய தேசியக்கட்சியின் அணி ஒன்றுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படும் நாளைய தினத்தில் அவர் நாடாளுமன்ற அமர்விலும் கலந்துக்கொள்ள மாட்டார். அமெரிக்காவில் நடைபெறும் வைபவம் ஒன்றில் கலந்துக்கொள்ள மகிந்த ராஜபக்ச அமரிக்கா செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.