குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி அறிவிக்கும் வரை அமைச்சர்களாக பதவி வகிக்கவும் சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி அறிவிக்கும் வரை அமைச்சர்களாக பதவி வகிப்பது என எஸ்.பி.திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, டி.பி. ஏக்காநாயக்க, சுமேதா ஜயசேன உள்ளிட்ட அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதியை இந்த அமைச்சரவையின் பிரதானி எனவும், ஜனாதிபதியின் கீழே தாம் இயங்குவதாகவும் பதவிகளை துறக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமருக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ தம்மை பதவி விலக்க முடியாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகுமாறு கோரினால் மட்டும் தாம் பதவி விலக முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என கருதும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தரப்பு, இந்த அமைச்சர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை கடுமையான எதிர்த்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லாப் பிரேரணையானது பிரதமருக்கு எதிரானது மாத்திரமல்ல அது அரசாங்கத்திற்கும் எதிரானது என்பதால், அதற்கு ஆதரவளித்த எவருக்கும் அமைச்சர் பதவிகளின் சிறப்புரிமைகளை அனுபவிக்க இடமளிக்க முடியாது என ஆளும் கட்சியினர் கூறியுள்ளார்.