குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையின் பின்னணியில் வெளிவராத பல இரகசியங்கள் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து, பிரதமராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்க திட்டமிடப்பட்டிருந்தது. மூன்று மாத குறுகிய காலத்திற்கே நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த மூன்று மாத குறுகிய காலத்தில் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவை கலைக்கும் நோக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டிருந்தது.
எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதன் காரணமாகவே இறுதி நேரத்தில் அவர்கள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை. மேலும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் மகிந்தானந்த ஆளுத்கமகே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்காக முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதை போதிய ஆதரவை வழங்கவில்லை. அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தலையிட்டு அவரை தடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.