மாலைதீவில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மாலைதீவில் அரசியல் ஸ்திரமற்ற நிலை நிலவுகின்ற நிலையில், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான அகமது நசீம் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார்.
அங்கு அவர் கருத்து தெரிவித்த போது மாலைதீவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுகிறது எனவும் நிலம் கையகப்படுத்தும் பணியிலும் சீனா ஈடுபட்டு வருகிறது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் சீனா தனது ராணுவ படைத்தளத்தை நிறுவவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் தனது போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை மாலைதீவில் நிறுத்தவும் சீனா திட்டமிட்டுள்ளது எனவும் இதைத் தடுக்காவிட்டால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே சர்வதேச சட்டங்கள், பிராந்திய பாதுகாப்பு உடன்படிக்கைகள், வர்த்தக ஒப்பந்தங்களுக்கு உட்பட்ட ஒழுங்குநிலை இந்தியா பசிபிக் பிராந்தியத்தில் இருக்கவேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதிபட உள்ளது எனவும் மாலைதீவில் ராணுவ தளம் அமைக்க சீனா முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை கவலையளிப்பதாக உள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.