Home இலங்கை யாழ்.மாநகர முதல்வர் உரை

யாழ்.மாநகர முதல்வர் உரை

by admin

எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு தொடங்குகின்றேன்…

எமது மக்களின் விடுதலைக்காக உயிர்நீத்த அனைத்து மாவீரர்களினதும், மக்களினதும் ஆத்மாக்களையும் நினைவில் நிறுத்தியவனாக…

மதிப்பிற்குரிய உறவுகளே!

யாழ் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்களே!!

ஆணையாளர்! செயலாளர்! துறைசார் தலைவர்கள்! அதிகாரிகள்! அன்புக்குரிய ஊழியர்கள்! ஊடகவியலாளர்களே!

இது எனது தொடக்க உரை, யாழ் மாநகரத்தின் முதன்மை மகனாக நான் முன்வைக்கும் எனதும் நான் சார்ந்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கொள்கை விளக்கவுரை.

நான் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதியும், தீராத வேட்கையும் கொண்டவன்; அதனை நோக்கி நாம் முன்னோக்கி நகரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன். தமிழ்த் தேசியத்தை நிலைநிறுத்துகின்ற எமது பாதையும் பயணமும் கடினமானதாக இருப்பினும்; அது ஜனநாயக ரீதியானதாகவும், மக்கள் அங்கீகாரத்தோடு கூடியதாகவும், தேசிய சர்வதேச அரங்கிலே மதிப்பார்ந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன்.

நாம் எமது மக்களின் விடிவுக்கான ஒரு நெடிய போராட்ட வரலாற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். அந்தப் போராட்டத்தில் அகிம்சைசார் மென்வலு முயற்சிகளும், யுத்தம்சார் வன்வலு முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் இன்றைய திகதியிலே எமது மக்களும், இந்த நாடும், சர்வதேசமும் மென்வலு சார்ந்த ஜனநாயக வழிமுறைகளே சாலச்சிறந்தது; என்று எமக்கு மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதுவே சிறப்பானதும், நிச்சயமானதுமாகும் என்பதே எனதும், நான் சார்ந்திருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நம்பிக்கையாகும்.

அந்தவகையில் இந்த இடத்திலே நான் யாழ் மாநகரின் முதல்வராக அமர்ந்திருப்பது; எமது மக்களுக்கான விடிவு நோக்கிய பயணத்தினை மேலும் வலுவூட்டுவதற்காகவேயன்றி வேறு நோக்கங்களுக்காக அல்ல என்பதையும் மிகவும் ஆணித்தரமாக இந்த இடத்திலே கூறிவைக்க விரும்புகின்றேன். எமது பதவிகளும், எமக்கு வழங்கப்படுகின்ற அதிகாரங்களும் எம்மையும் எமது மக்களையும் எமது மக்களுக்கான விடிவு நோக்கிய பயணத்திலிருந்து திசை திருப்புமாக இருந்தால், அந்தக் கணமே எமது பதவிகளைத் துறக்கவும், எமது அதிகாரங்களைத் தூக்கியெறியவும் நாம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை என்பதையும் இங்கு நான் குறித்துக் கொள்கின்றேன்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜனநாயக சூழலில் எமது மண்ணிலே யாழ் மாநகர சபைக்கான தேர்தல் இடம்பெற்று நாமெல்லாம் இங்கு யாழ் மாநகரசபையின் மதிப்பிற்கும், கௌரவத்திற்கும் உரிய உறுப்பினர்களாகத் தேர்வாகியிருக்கின்றோம். தமிழ் பேசும் மக்கள் என்ற பொது அடையாளத்தோடு பல்வேறு கட்சிகளாக, குழுக்களாகப் பிரிந்து நாம் தேர்தல்களை எதிர்நோக்கினோம்; இப்போது இந்த அவையிலே தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளாக, தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளாக நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு “யாழ் மாநகரசபையின் கௌரவ உறுப்பினர்” என்ற அடையாளம் சுமந்து வந்திருக்கின்றோம்.

இன்றுமுதல் கட்சிபேதங்களுக்கு அப்பால் எமது மக்களின் நன்மைக்காக, நலன்களுக்காக உழைக்கின்றவர்களாக நாம் எல்லோரும் செயற்பட முன்வரவேண்டும் என்ற பொதுவான அழைப்பை முதற்கண் விடுத்தவனாக…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாம் “சுத்தமான பசுமை மாநகரம்” என்னும் கருப்பொருளோடு கூடிய பிரதானமான 7 விடயங்களையும் 31 துணை விடயங்களையும் உள்ளடக்கிய ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்கள் முன்னிறுத்தி எமக்கு வாக்களியுங்கள் என்று மக்களைக் கோரினோம்; இம்மாநகரின் மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து 27 வட்டாரங்களுள் 14 வட்டாரங்களைப் பெரும்பான்மையாக வெற்றி கொள்ளச் செய்யும் வகையில் எமக்கு வாக்களித்தார்கள்; ஏனைய 13 வட்டாரங்களினதும் மக்களும் எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு வாக்களித்திருந்த போதிலும் மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசத்திலே  அவ்வட்டாரங்களிலிருந்து எமது பிரதிநிதிகள் தேர்வாகவில்லை. இருந்த போதிலும் தேர்தல் முடிவுற்ற நாள் முதல் மக்கள் ஜனநாயகரீதியில் எமக்களித்த மக்கள் ஆணையின் பிரகாரம் இப்பிரதேசத்தில் எமக்கு வாக்களித்த மக்கள், ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள், அனைவரையும் ஒரே கண்கொண்டு “எமது மாநகரின் மக்கள்” என்றே நாம் நோக்குவோம்.

யாழ் மாநகரின் முக்கியத்துவம் எத்தகையது என்பது எம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம், மாவட்டத்தின் தலைநகராக; மாகாணத்தின் தலைநகராக; வரலாற்றின் தலைநகராக; தமிழ் மொழியின் தலைநகராக அது பல்தன்மை கொண்டது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது; இலங்கை மக்களாலும், உலக மக்களாலும் அதிகம் நேசிக்கப்படுவது. இன்று நாம் எமது மாநகரைப் பார்க்கின்றபோது அதனது நிலை “இன்னும் பன்மடங்கு முன்னேற்றமடைய வேண்டும்” என்ற செய்தியை எமக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது; அந்த முன்னேற்றம் வெறுமனே இங்கிருக்கின்ற உட்கட்டமைப்புக்களில் ஏற்படுகின்ற முன்னேற்றம் மாத்திரமாக இருக்க முடியாது. மாறாக அது இந்தப் பிரதேசத்தின் மக்களும் அவர்களது வாழ்வாதாரமும், வாழ்க்கைத்தரமும், இந்தப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல், இந்நகரால் பயனுறுவோர் என்பவற்றை மையப்படுத்தியதாக ஒழுங்கமைக்கப்படல் வேண்டும்.

யாழ் மாநகரின் முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல்; நான் ஒரு மாணவனாக பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொண்டுவருகின்றேன், நிர்வாக நடைமுறைகள், துறைகளின் செயற்பாடுகள், மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புக்களும், கழிவகற்றல் முகாமைத்துவம், எமது அதிகார எல்லைகள், வர்த்தக சூழ்நிலைகள், ஊழியர்கள், அதிகாரிகள், நிதிசார்ந்த நிலைமைகள் எனப் பலவிடயங்களையும் நான் கண்டறிந்துகொண்டேன். இவற்றோரு முகாமைத்துவம் சார்ந்து எனக்கிருக்கின்ற அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, இவற்றை எமது வாய்ப்புகளாக, வளங்களாக, சவால்களாக, பிரச்சினைகளாக, அடையாளம் செய்து அவற்றைச் சிறப்பாகக் கையாளத்தக்க ஒரு பொறிமுறை மிக விரைவில் வகுக்கப்படும்.

எனது முதலாவதும் முதன்மையானதும் பணியாக மக்கள் தேவைகளை அறிந்து கொள்தல் என்னும் விடயம் அமையவிருக்கின்றது. எமது 27 வட்டாரங்களுக்குமான கௌரவ உறுப்பினர்கள், பட்டியல் மூலம் தெரிவாகியிருக்கும் உறுப்பினர்கள், நிலையியற் குழுக்கள், அதிகாரிகள், ஊழியர்கள், நான் நியமிக்கவிருக்கும் இணைப்பாளர்கள், ஆலோசகர்கள், இந்தப் பிரதேசத்தின் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகள் மற்றும் மதப்பெரியார்களின் துணையோடு எமது மாநகரில் நிலவும் குறைபாடுகளையும், தேவைகளையும், உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று முதன்மை அடிப்படையில் எமது தேவைகளும், நிவர்த்திக்கப்படவேண்டிய குறைபாடுகளையும் ஒழுங்கமைத்து அதற்கேற்றாற்போல செயற்திட்டங்கள் வகுத்துச் செயற்படுவதே எனது எண்ணமாகும். அதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்த்து நிற்கின்றேன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலே நாம் முக்கியமாகக் குறிப்பிட்ட விடயங்களின் சில முக்கியவிடயங்களை மாத்திரம் இங்கு தொட்டுச் செல்கின்றேன்.

  1. 1985 ஏப்ரல் 10 அன்று அழிக்கப்பட்ட யாழ். மாநாகரசபைக் கட்டடம், மீண்டும் அதே இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக, புதுப் பொலிவுடன் அமையும்.
  2. மாநகர திண்மக் கழிவகற்றல் முறைமை நவீன பொறிமுறையில் வினைத்திறனுடன் செயற்பட்டு நகரம் சுத்தமாகப் பேணப்படும்
  3. சாத்தியமான வழிமுறையின் கீழ் மாநகரம் முழுவதற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் விநியோகம்
  4. நிலத்தடி நீர் மாசடைதலைத் தடுககு; ம் வகையில், மலக்கழிவு அகற்றலுக்கான பாதாள சாக்கடைத் திட்டம்
  5. மாநகருக்கு நவீன தொழிநுட்ப முறைமையில் வடிகால் அமைப்பு முறை அறிமுகம்.
  6. மாநகர எல்லையினுள் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு உடனடித் தீர்வு
  7. முன்னைய நிர்வாகங்களில் இடம்பெற்ற முறைகேடுகள், ஊழல், மோசடிகளுக்கு உடனடி விசாரணை.சேவை வழங்கல்

இதற்கு மேலதிகமாக மாநகரத்தின் மக்கள் எம்மோடு நேரடியாகவும், உடனடியாகவும் தொடர்பு கொள்ளத்தக்கவகையில் விஷேட பொறிமுறையொன்றினை நாம் உடனடியாக உருவாக்கவுள்ளோம்.

மாநகரத்தின் நிதி சார்ந்த விடயங்களை அறிந்துகொள்வதற்கு விஷேட அறிக்கையொன்றினைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன, அதனைத் தொடர்ந்து விஷேட குறைநிரப்புப் பிரேரணையொன்றின் மூலம் எமது நிதிசார்ந்த விடயங்களை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகள் இந்த அவையின் துணையோடு இடம்பெறும் என்பதை இங்கு குறித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

யாழ் மாநகரத்தின் நிர்வாக விடயங்களை நோக்கும்பொழுது அது மேலும் செழுமைப்படுத்தப்படல் அவசியம் என்பதை நான் உணர்கின்றேன், இதுவரை காலமும் இதன் நிர்வாகம் எவ்வாறு முன்கொண்டு செல்லப்பட்டது என்பதை நான் மீளாய்வு செய்வதற்கு விரும்பவில்லை, ஆனால் இனிவரும் காலங்களில் அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் என்பதில் நான் கவனமாக இருப்பேன், நாங்கள் ஒரு தொழிலைச் செய்வதற்காக இங்கு வரவில்லை, மாற்றமாக நாங்கள் ஒரு பணியைச் செய்வதற்காகவே இங்கு வந்திருக்கின்றோம். எனவே எனது மாநகரசபையின் அனைத்து ஊழியர்களும் இதன் பங்காளர்களே, இந்த மாநகரின் முன்னேற்றத்தின் பங்காளிகளாகவே எமது ஊழியர்கள் அனைவரையும் நான் காண்கின்றேன், எனவே வினைத்திறனான நிர்வாகமொன்றை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து நிகழ்த்திக்காட்டுவோம்.

மாநகரசபைச் சட்டமூலம் 1947ம் ஆண்டின் 24ம் சட்டமூலத்திற்கு அமைவாகவும், அன்றுமுதல் 1987ன் 35 இலக்கச்சட்டமூலம் வரையில் அச்சட்டமூலத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்டத்திருத்தங்கள், இணைப்புகளுக்கு அம்மைவாகவும், உள்ளூராட்சி, 2015களில் மாகாணசபைகள் அமைச்சினால் முன்மொழியப்பட்டிருக்கும் முன்மொழிவுகள், வழிகாட்டல்களுக்கு அமைவாகவும் இந்த அவையின் செயற்பாடுகளை ஒழுங்கமைக்க நான் முழுமையாக அர்ப்பணிப்போடு செயலாற்றுவேன், அதற்கும் உங்களது ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றேன்.

இறுதியாக, கடந்த காலங்களிலே யாழ் மாநகரசபையிலே பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக பலரும் பலவேறு சந்தர்ப்பங்களிலே முறைப்பாடுகளை முன்வைத்து வந்திருக்கின்றார்கள், இவை உரிய முறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும், வடக்கு மாகாணசபையின் உள்ளூராட்சி அமைச்சு இதுவிடயத்தில் முன்னெடுக்கும் அனைத்துவிதமான விசாரணைகள், மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த அவை தனது பரிபூரண ஒத்துழைப்புக்களை நல்கும் எனவும் குறிப்பிடவிரும்புகின்றேன்.

எனவே இத்தகைய அடிப்படைகளோடு சுத்தமான பசுமை மாநகரை நோக்கி கட்சி பேதங்களுக்கு அப்பால், மத்திய, மாகாண அரசுகளின் உதவிகளும் ஒத்துழைப்புக்களோடும் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என உங்கள் அனைவரையும் அழைத்தவனாக எனது  முதலாவது கொள்கைவிளக்க உரையை நிறைவு செய்கின்றேன்

நன்றி

வணக்கம்

மாண்புமிகு இம்மானுவேல் ஆர்னோல்ட் யாழ் மாநகர பிதா அவர்கள் 11/04/2018 அன்று,  யாழ் மாநகரசபையின் 25வது முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டு, பதவியேற்ற பின்னர் கூட்டப்படும் முதலாவது அவையில் முன்வைத்த கொள்கை விளக்கவுரை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More