காவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலியாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையிலான ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக அரசியல் கட்சியினரும், திரைப்பட துறையினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்கள் மேற்கொண்டிருந்தனர்.
மேலும் எஞ்சிய 6 ஆட்டங்களுக்கும் இதே போன்று இடையூறு ஏற்படுத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், சென்னை காவல்துறை ஆணையாளரை விஸ்வநாதனை நேற்று சந்தித்து பேசினார். இதன்போது தற்போதைய சூழலில் சென்னையில் நடக்கும் ஆட்டங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது சிரமம் எனவும் போட்டி அட்டவணையை மாற்றி அமைப்பதே சரியாக இருக்கும் எனவும் சென்னை காவல்துறை ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவசரமாக ஆலோசனை நடத்தி சென்னையில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஐ.பி.எல். ஆட்டங்களையும் வேறு இடத்துக்கு மாற்றுவது என தீர்மானித்துள்ளனர். ஆந்திராவின் விசாகப்பட்டினம் , கேரளாவின் திருவனந்தபுரம் ஈ மராட்டியின் புனே குஜராத்தின் ராஜ்கோட் ஆகிய 4 இடங்களில் ஏதாவது ஒன்றில் தங்கள் அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்களை நடத்திக்கொள்ளும்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு கிரிக்கெட் வாரியம் பட்டியலை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் புனே மைதானத்தில், தங்களது உள்ளூர் ஆட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.