சித்திரை புத்தாண்டை சிங்கள பௌத்தர்களும் கொண்டாடுவது பௌத்தம் இலங்கைக்கு தமிழ் மூலமே கொண்டு வரப்பட்டதை மெய்ப்பிக்கின்றது – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் பஷீர்
இலங்கையில் சித்திரை புத்தாண்டை சிங்கள பௌத்தர்களும் கொண்டாடுவது பௌத்தம் இலங்கைக்கு தமிழ் மொழி மூலமே கொண்டு வரப்பட்டது என்கிற வாதத்தை மெய்ப்பிக்கின்றது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.
இவர் சித்திரை புத்தாண்டு தொடர்பாக நேற்று திங்கட்கிழமை விடுத்த செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
முற்காலத்தில் சித்திரை பிறப்பு இந்துக்களின் கொண்டாட்டமாக அன்றி தமிழரின் திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்பே சித்திரை பிறப்பு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். பக்தி இயக்கத்தின் வளர்ச்சி போக்கில் சைவ வைணவ மதங்களினால் இக்கொண்டாட்டம் உள்வாங்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
இலங்கையில் சித்திரை புத்தாண்டை சிங்கள பௌத்தர்களும் கொண்டாடுவது பௌத்தம் இலங்கைக்கு தமிழ் மொழி மூலமே கொண்டு வரப்பட்டது என்கிற வாதத்தை மெய்ப்பிக்கிறது. உலகின் வேறெந்த பௌத்த நாடுகளிலும் சித்திரை பிறப்பு பண்டிகையாக கொண்டாடப்படுவதில்லை என்பது இவ்வாதத்தை மேலும் வலுவடைய செய்கிறது.
கிறிஸ்துவுக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை சமணமும் பௌத்தமும் தமிழ்நாட்டில் பெருவீச்சுடன் இயங்கி வந்துள்ளன. எனவே தமிழர் கொண்டாட்டமான சித்திரை பிறப்பை இலங்கையில் சிங்கள பௌத்தர்களும் கொண்டாடுவது தமிழ் – பௌத்தத்துக்கு ஊடாக சிங்களத்துக்கு பரிமாற்றம் செய்த பண்பாடு இது என்பதை குறிக்கிறது.
மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் பெருமான் அவரின் தங்கை மீனாட்சி திருமணத்தை புறமொதுக்கி வண்டியூர் துலுக்க நாச்சியார்(முஸ்லிம் மாது) வீட்டில் தங்கிய கதை நினைவுக்கு வருகிறது.