குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் குறி்த்து ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மக்கள் விடுதலை முன்னணி பேச்சுவார்த்தை நடத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஆட்சி முறையை ஒழிக்கும் 20வது அரசியலமைப்புத்திருத்தச் சட்ட யோசனை எதிர்வரும் மே 8 ஆம் திகதி ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்கள் விடுதலை முன்னணி சமர்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
திருத்தச் சட்டத்தை நாளைய தினம் தாக்கல் செய்ய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அவசரமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்ததால், திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்படுவது மே 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.