டென்மார்க் கண்டுபிடிப்பாளரான பீட்டர் மேட்சனின் (Peter Madsen) நீர்மூழ்கிக் கப்பலில் வைத்து ஸ்வீடன் நாட்டு பெண் பத்திரிகையாளர் கிம் வோல்(Kim Wall) கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மேட்சனுக்கு ஆயுள் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
30 வயதான பெண் பத்திரிகையாளர் கிம் வோலை மூச்சு திணற வைத்து அல்லது தொண்டையை அறுத்து மேட்சன் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே பீட்டர் மேட்சன் தயாரித்த நீர்மூழ்கிக் கப்பலில் அவரைப் பேட்டியெடுப்பதற்காக சென்ற பெண் பத்திரிகையாளர் கிம் வோலின் சிதைந்த சடலம், 11 நாளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி டென்மார்க் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
கிம் வோலின் உடலை சிதைத்து, உடலை நீழ்மூழ்கிக் கப்பலில் இருந்து வீசியதாக முன்னர் மேட்சன் ஒப்புக்கொண்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாகவும், பாலியல் தாக்குதல் தொடுத்தாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் 47 வயதான மேட்சனுக்கு நேற்று புதன்கிழமை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது