234
தமிழ் தேசிய விடுதலையையும் உழைக்கும் மக்களின் விடுதலையையும் வென்றெடுப்போம்!
உழைக்கும் மக்களின் விடுதலையைக் குறிக்கும் தினமாகவே மேதினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1886ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் வேலை நேரக் குறைப்பு, ஊதிய அதிகரிப்பு, சங்கம் வைக்கும் உரிமை ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எட்டு மணி நேர வேலை இதில் பிரதானமாக இருந்தது. அப்போராட்டம் மீது பொலிசார் தாக்குதலை மேற்கொண்டனர். தொழிலாளர்களின் வெண்சட்டைகள் செஞ்சட்டைகளாயின. அவர்களின் செங்குருதி சிக்காக்கோ நகரில் ஓடியது. இத்தாக்குதலைக் கண்டித்து மே 3ம், 4ம் திகதிகளில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சிக்காக்கோ நகரில் இடம்பெற்றது. பொலிசார் இவ் ஆர்ப்பாட்டத்தில் குண்டொன்றை வெடிக்க வைத்தனர். ஏழு தொழிலாளர்களும் நான்கு பொலிசாரும் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். தொழிலாளர் தலைவவர்கள் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டது. நான்கு தலைவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏனையோருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்தந்த தலைவர்கள் இறுதியாகக் கூறியவை ‘எமது கல்லறைகளின் மௌனம் ஆயிரம் சொற்பொழிவுகளை விட அதிகமானது’ என்பதே.
உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாட்டைத் திரட்டித் தந்தவர் கால்மாக்ஸ். அவரது இணைபிரியா நண்பரான பிரடெறிக் ஏங்கெல்;ஸ் தலைமையிலான தொழிலாளர்களின் சர்வதேசிய அமையம் மே 01ம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனம் செய்தது. இன்றைய மே தினம் 132வது மேதினம் ஆகும். தமிழ் உழைக்கும் மக்களும் இதனை ஏற்று மே 1ம் திகதியை உழைக்கும் மக்களின் விடுதலை தினமாக அனுஸ்டிக்கின்றனர்.
தமிழ் உழைக்கும் மக்கள் ஒரே நேரத்தில் வர்க்க ஒடுக்கு முறைக்கும் தேசிய ஒடுக்கு முறைக்கும் முகம் கொடுக்கின்றனர். தேசிய ஒடுக்கு முறை இதில் பிரதானமானது. தேசிய விடுதலை கிடைக்கும் போது தான் உழைக்கும் மக்களுக்கும் விடுதலை கிடைக்கும். உழைக்கும் மக்கள் விடுதலைக்கான உத்தரவாதத்தையும் தமிழ் தேசியத் தலைமை கொடுக்க வேண்டியது அவர்களின் மாபெரும் கடமையாகும். தமிழ்த்தேசியம் என்பது தேசிய விடுதலையை மட்டும் உள்ளடக்கியது மட்டுமல்ல சமூக விடுதலையையும் உள்ளடக்கியது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுப்பது தமிழ் தேசியம் தேசிய விடுதலையையும் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே!
இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பது அழிக்கப்படுவது தான். அதாவது தமிழ்த்தேசத்தை தாங்கும் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பது அழிக்கப்படுவதாகும். இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள தேசம் கருதுவதனாலேயே இவ் அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ் மக்களின் இதுவரை காலப் போராட்டம் என்பது இவ் இன அழிப்பைத் தடுப்பதற்கான தற்காப்புப் போராட்டமேயாகும். தமிழ் மீனவர்களும், தமிழ் விவசாயிகளும், தமிழ் தொழிலாளர்களும் இவ் இன அழிப்பினால் மிகவும் துன்பப்படுகின்றனர். தமிழர் தாயகத்தின் எல்லைப் புறங்களில் வசிக்கும் மக்களின் நிலை வார்த்தைகளுக்குள் அடங்குவன அல்ல.
எனவே இத்தொழிலாளர் தினத்தில் தமிழ்த் தேசத்தின் புதல்வர்களாகிய நாம் பின்வருவனவற்றை சபதமாக எடுத்துக் கொள்வோம்.
1) தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும் அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படல் வேண்டும்.
2) தாயகம், தேசியம், சுயநிர்ணயம், தமிழ்த் தேசித்தின் தனித்துவமான இறைமை, என்பவற்றின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இரண்டு தேசங்கள் ஒரு நாடு என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கி தமிழ்த் தேசத்தின் அரசியலை முன்னெடுப்போம்.
3) இலங்கைத் தீpவினை மையமாக வைத்து இடம்பெறும் புவிசார் அரசியல் போட்டியில் தமிழர்களை வெறும் கருவியாகப் பயன்படுத்தும் நிலைக்கு முற்றுப்புள்ளிவைத்து, தமிழ் மக்களின் அரசியல் நலன்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பேரம்பேசுவதன் மூலம் சர்வதேச சமூகத்துடனான உறவை மேம்படுத்தும் இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்போம்.
4) தினந்தோறும் இடம்பெறுகின்ற கட்டமைப்பு சார் இனவழிப்பை தடுக்க சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையை உருவாக்க குரல் கொடுப்போம்.
5) ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஸ்ரீலங்கா அரசு உறுதியளித்தவாறு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அச்சட்டத்தின் கீழ் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.
6) காணாமல் போனோர் விவகாரத்தை சர்வதேச மட்டத்தில்
பேசுபொருளாக்கி சர்வதேச விசாரணைக்காக குரல் கொடுப்போம்
7) மகாவலி அபிவிருத்தி வலயம் என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்.
8) தமிழர் தாயகத்தின் மீது இனஅழிப்பை மேற்கொண்டதுடன், தாயகத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள ஸ்ரீலங்கா ஆயுதப்படைகள் முற்றாக வெளியேற வேண்டுமென குரல் கொடுப்போம்.
9) போரினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பொதுமக்களின் மேம்பாட்டிற்காக சமூகத்தை ஒருங்கிணைத்து செயலாற்றுவோம்.
10) தமிழ் பெண்கள் அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெற ஒன்றிணைந்து போராடுவோம்.
11) தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக் கூடிய தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவோம்.
12) நிலம், புலம்பெயர்ந்துவாழும் தேசம், தமிழகத்திற்கிடையே ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை உருவாக்குவோம்.
13) சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் நட்புறவுகளைப் பேணி ஒன்றாகக் கரங்கோப்போம்.
14) மக்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாக்குவதன் மூலம் மக்கள் பங்கேற்பு அரசியலை முன்னேற்றுவோம்.
15) நில உரிமை, வீட்டுரிமை உட்பட மலையக மக்களின் தேசிய உரிமைகளை உறுதிப்படுத்த குரல்கொடுப்போம்
-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-
(அகில இலங்கை தமிழ் காங்கிஸ்)
Spread the love