குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய இணைந்து காலியில் நடத்தும் மே தினக் கூட்டத்திற்கு அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தில் இருந்து விலகிய இவர்கள் தம்முடன் இணைத்துக்கொள்ள இது பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். இணைய வேண்டிய நேரத்தில் அவர்களுக்கு அது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த, எந்த காரணத்தை கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நடத்தும் மே தினக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் தொழில் உரிமைகளை இல்லாமல் செய்து வருகிறது. அமைச்சரவை மாற்றம் அல்ல எதனை செய்தாலும் அரசாங்கத்தினால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.