மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்து பிரான்ஸை ஆத்திரத்துக்குள்ளாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 2015-ல் இடம்பெற்ற நடந்த துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் டெக்ஸாசில் தேசிய துப்பாக்கி அமைப்பில் உரையாற்றிய டிரம்ப், பிரான்ஸில் துப்பாக்கி வைத்திருப்பது குறித்து கடுமையான சட்டங்கள் இருப்பதாகவும் அங்கு யாரிடமும் துப்பாக்கி இல்லை எனவும் குறிப்பிட்ட அவர் அங்கு நடைபெற்ற தாக்குதலில் 130க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டது நமக்கு தெரியும். யாராவது அவர்களை பற்றி பேசுவதுண்டா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒரு ஊழியர் அல்லது அங்கிருக்கும் யாராவது ஒருவர் துப்பாக்கி வைத்திருந்து, அதனை பயங்கரவாதிகளை நோக்கி பிரயோகித்திருந்தார் அவர்கள் ஓடியிருப்பார்கள் எனவும் டிரம்ப் தெரிவித்தார். இந்தநிலையில் குறித்த டிரம்பின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதாகக் கூறிய பிரான்ஸின் வெளியுறவுத்துறை அமைச்சு இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
அதேவேளை டிரம்பின் கருத்துகள் வெட்கக்கேடான ஒன்று என தாக்குதல் சம்பவத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த ஹோலேன்ட் தெரிவித்துள்ளார். எனினும் அண்மையில் வோஷிங்டனில் டிரம்பை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுலல் மக்ரோன் இதுகுறித்து இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது