குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகலவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 60 ற்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பெண்கள் மற்றும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற பெண்கள் உள்ளடங்களாக இவ்வாறு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பெண்கள் அட்டை,நண்டு,இறால் போன்ற கடல் உணவுகளை பிடித்து விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். குறித்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும்,ஆபத்துகளுக்கும் கடலில் முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள்,தமது அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான பணத்தை குறித்த பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளின் மூலமாகவே பெற்று வருகின்றனர். எனினும் தாம் கடலில் உயிர் ஆபத்துக்களை கூட சந்திக்கும் நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த கடல் பிரதேசத்தில் பல்வேறு ஆபத்துக்கள் உள்ள போதும் குழுக்களாக சென்று இந்தப் பெண்கள் அட்டை,நண்டு,இறால் போன்றவற்றை கையினால் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் ஆட்டி,கவாட்டி என பல விதமான ஆபத்தான பொருட்கள் காணப்படுவதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலில் கூடுகளை வைத்து மீன் பிடியினை மேற்கொள்ளுவதினால் இறால்,நண்டு போன்றவற்றின் இனம் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆண்கள் கடந்த 3 வருடங்களாக கூடு வைத்து மீன் பிடிக்கின்றனர் எனவும் இதனால் குஞ்சு இனங்கள் வெகுவாக அழிவடைந்து வருகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் சகல தரப்பினரிடமும் முறையிட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.இதனால் காலப்போக்கில் அட்டை,நண்டு, இறால் போன்றவற்றின் உற்பத்தி அழிவடையும் நிலை ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். சுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த பெண்கள் கடலில் நண்டு,இறால்,அட்டை போன்றவற்றை பிடிப்பதற்குச் செல்லுகின்ற போதும் அவர்கள் தொடர்ச்சியாக ஆபத்துக்களிலும் சிக்கியுள்ளனர்.
மேலும் தற்போது குறித்த பெண்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி கடலில் இறங்கி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு போதும், கடற்படையினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும், தற்போது 1500 ரூபாய் செலுத்தி ‘பாஸ்’ அனுமதியை பெற்று கடற்படையினரிடம் காண்பித்து விட்டே கடலில் இறங்குவதாகலும் அந்த பெண்கள் தெரிவித்தனர்.
எனினும் குறித்த பெண்கள் கடலில் பாதுகாப்பற்ற முறையில் மீன் பிடியில் ஈடுபடுவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்கும் வகையில் அதிகம் தேவை உள்ள 30 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் அட்டை பிடிப்பதற்கான ஆடைகளை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.