காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை தொடர்பாக நாளை மதியம் 2 மணி அளவில், ஷெரி காஷ்மீர் சர்வதேச ஆலோசனை கூடத்தில் அவசர ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு அம்மாநில முதல் அமைச்சர் மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சோபியான் அருகே உள்ள பதிகாம் பகுதியில் அண்மையில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே இடம்பெற்ற துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை விரட்டும் முயற்சியில், 5 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பால் பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் அப்பகுதிக்கு சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த 22 வயதுடைய திருமணி என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்த அம்மாநில முதல் அமைச்சர் மெகபூபா முக்தி, மனிதநேயம் கொல்லப்பட்டதாக கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.