ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்று முன்தினம் நிகழ்த்திய கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடிப் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வை வழங்கப் போகின்றார் என்பது குறித்து அவரது பேச்சில் தொனிக்கவில்லை என்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொள்கை விளக்க உரை மீதான இன்றைய விவாதத்தில் தமது அதிருப்தியை வெளிக்காட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீது இன்று விவாதம் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதன்போது கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாடு எடுப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கே நேற்றைய கூட்டம் நடத்தப்பட்டதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை, சபை ஒத்திவைப்புத் தீர்மானமாகவே இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதால், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படமாட்டாது என கூறப்படுகிறது.
இருந்த போதும், ஜனாதிபதியின் உரை தொடர்பில் கூட்டமைப்பின் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் உரை தொடர்பில் பெரும் ஏமாற்றத்தை வெளியிட்டனர். அரசியல் தீர்வு தொடர்பில் எதுவுமே அவர் குறிப்பிடாமை தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டனர். இதனை கூட்டமைப்பின் தலைமையும் அதனை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்கள் பிரச்சினையை குறிப்பிடப்படாமை குறித்து இன்றைய விவாதத்தில் பேசுமாறு கூட்டமைப்புத் தலைமை நேற்றைய கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.