பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்காக உளவு பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தூதரக அதிகாரி மாதுரி குப்தா குற்றவாளி என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய மாதுரி குப்தா, பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததால் கடந்த 2010ம் ஆண்டு டெல்லி சிறப்பு பிரிவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தகவல்களை அனுப்பியதாகவும் ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது மாதுரி குப்தா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர் குற்றவாளி என நீதிபதி சித்தார்த் சர்மா தீர்ப்பு வழங்கினார். தண்டனை தொடர்பான வாதங்கள் நாளை நடைபெற உள்ளது. அதன்பின்னர் மாதுரி குப்தாவுக்கான தண்டனை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.