அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் 10 பேர் வரை இறந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பாடசாலை தற்போது பூட்டிவைக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன் நகருக்கு தெற்கே 40 மைல்களுக்கு அப்பால் உள்ள சாண்டா ஃபே ஹை ஸ்கூல் (Santa Fe High School) என்ற இந்தப் பாடசாலை நடந்த தாக்குதலுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடந்த பாடசாலையில் காலையில் வகுப்புகள் தொடங்கியவுடன் தாக்குதல்தாரி துப்பாக்கிசூடு நடத்தியதில் பலர் காயமுற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதல்தாரி பாடசாலையில் பயிலும் ஒரு மாணவரா என்பது தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
(சந்தேக நபர்)
உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு பாடசாலை வளாகத்தில் தீ எச்சரிக்கை ஒலியை தாங்கள் கேட்டதாக பல மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த எச்சரிக்கை மணி எப்படி இயக்கப்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கேடிஆர்கே -டிவி என்ற உள்ளூர் ஊடகத்திடம் பேசியபோது, தான் தனது கலை வகுப்பில் இருந்துபோது இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும், ஒரு பெண் இந்த துப்பாக்கிசூட்டில் காயமடைந்ததை தான் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
”சிறுதுப்பாக்கி ஒன்றை ஏந்திய ஒருவர் பாடசாலையில் நுழைந்த உடனே சுட ஆரம்பித்துவிட்டார்” என்று கூறிய அந்த மாணவர் , ”துப்பாக்கிசூட்டில் அந்த மாணவிக்கு காலில் காயம் ஏற்பட்டது” என்று மேலும் விவரித்தார்.