தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொள்ளும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, சுஷ்மா ஸ்வராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதுமே தயாராக உள்ளது. அதேநேரம், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஏவி விடும் தீவிரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்களும் ராணுவ வீரர்களும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, ஒருபுறம் தீவிரவாத தாக்குதலும் மற்றொரு புறம் பேச்சுவார்த்தையும் நடைபெறுவது என்பது சாத்தியமற்றது. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும் வரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.-