டெல்லியின் சனத்தொகை அதிகமுள்ள மால்வியா நகரில் உள்ள ரப்பர் குடோனில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தென் கிழக்கு டெல்லி பகுதி முழுதும் வானில் கடும் புகை மண்டலம் எழும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ரப்பர் தொழிற்சாலையின் உள்ளே இருந்த பாரவூர்தியில் பற்றிய தீ குடோனுக்கும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்ததீயினை கட்டுப்படுத்துவதற்காக 30 தீயணைப்பு வண்டிகள் மால்வியா நகர் ரப்பர் தொழிற்சாலையை நேக்கி சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடி;கையில் ஈடுபட்டதாகவும் இதன் போது ஒரு தீயணைப்புப் படை வீரர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தீ பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதால் அது ரப்பர் தொழிற்சாலையிலிருந்து வெகுவிரைவில் பக்கத்தில் உள்ள பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது என தீயணைப்புத் துறையினர் எச்சரித்துள்ளனர். தீ ஏற்கெனவே தொழிற்சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்புக் கட்டிடத்திற்குப் பரவியதாகவும் ஆனால் அங்கு எவரும் இல்லை என்பதனால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடோனுக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதி முழுதும் தற்போது யாரும் உள்ளே செல்ல முடியாது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.