இந்தியாவின் உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட கடும் புயல் மற்றும் மழை காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று காலை அந்த மாநிலங்களில் பலத்த மழையுடன் கூடிய சூறைக்காற்று வீசியது. பிஹாரில் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததாகவும் சிறிய வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் பிஹாரில் புயலால் வீடு இடிந்து விழுந்தமையிலும் மின்னல் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களிலும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்ளது. அதேபோல், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நேற்று பலத்த மழையுடன் கூடிய புயல் வீசியதனால் ரேபரேலி, உன்னாவ், கான்பூர் ஆகிய பகுதிகளில் கடுமையான பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் 15 பேரும் ஜார்க்கண்டில் 13 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் இந்தப் பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 3 மாநிலங்களிலும் அடுத்த 24 மணிநேரத்துக்கு புயலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது