குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
1,190 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளின் ஊடாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 118 நபர்களுக்கு, அர்ஜுன் அலோசியஸிடமிருந்து பணம் வழங்கப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
மருதானை சீ.எஸ்.ஆர் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, அம்முன்னணியின் ஒருங்கிணைப்பாளர், வசந்த சமரசிங்க, இந்த காசோலைகளை வங்கியில் மாற்றிய 166 நபர்கள் தொடர்பில் கண்டயறிப்பட வேண்டும். எனவும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், மறைக்கப்பட்ட 106 பக்கங்களையும் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை “பிணைமுறி மோசடியால், இழக்கப்பட்ட நிதியில், பெரும்பகுதி ஊழியர் சேமலாப நிதியத்துக்குரியது. சுமார் 26 இலட்சம் பேரின், ஊழியர் சேமலாப நிதியை மீண்டும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்ட வசந்த சமரசிங்க,
மத்திய வங்கியிலிருந்து, 2016 ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலும், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஈடுபட்டமையால், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு 12,500 மில்லியன் ரூபாய் கொள்ளை இலாபமாகக் கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் “மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில், எதுவுமே அறியாதவர் போல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசிவருகின்றார்” என்றும் தெரிவித்துள்ள ஊழல் எதிர்ப்பு முன்னணி, “மோசடியின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில், மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றியிருந்தார். அத்தோடு, 2017 மார்ச் மாதம் வரையில், அர்ஜுன் அலோசியஸின் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனம், மத்திய வங்கியோடு கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டிருந்தது” எனவும் குறிப்பிட்டுள்ளது.