குளோபல் தமிழ் செய்தியாளர்
கிளிநொச்சியில் கிருஷ்ணபுரத்தில் உள்ள இராமகிருஷ்ண வித்யாலயம்த்தில் பாடசாலை உடைக்கப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப் பாடசாலையின் செயற்பாடுகளை இந்தக் கொள்ளை பெரிதும் பாதித்துள்ளது. இது தொடர்பில் அதிபர் ஜொய் பியசீலன் கருத்து தெரிவிக்கையில் பொருளாதார நலிவுற்ற குடும்பங்களின் ஏழை மாணவர்களுக்கு தாகம் தீர்க்க உதவிய தண்ணீர் பம்பியும் ஆளுமை விருத்திக்கு உதவிய ஒலிபெருக்கியும் கற்றல் கற்பித்தல் பணிக்கு உதவிய கணனி மற்றும் மல்ரிமீடியா என்பவையுமம் பாடசாலை கதவுகள் உடைக்கப்பட்டு அபகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கிருஷ்ணபுரம் மக்கள் எந்தவொரு பொருளாதார பலமற்ற சமூகம் என்றும் பழைய மாணவர்களது பலமே இல்லாத பாடசாலையே தமது பாடசாலை என்றும் கூறினார். அத்துடன் அரசியல் அக்கறைக்குள் உட்படாதாத, உயர்மட்ட சமூகத்தின் வகுதிக்குள் அடங்காததால் கருத்திலெடுக்கப்படாது போன பல சந்தர்ப்பங்களில் பலரிடம் இரந்து கேட்டபோது
சிலர் செய்த உதவிகளும் கபளீகரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் தாம் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறிய அவர் மனிதங்கள் மரணித்துப்போனதாகவே எண்ணுவதாகவும் இந்தக் குழந்தைகள் மீது ஏனிந்தக் குரோதம் என்றும் கேள்வி எழுப்பினார். எவ்வாறெனினும் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்