பல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை இலங்கையின் விமானப்படை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை தரப்புகள் ஆர்வம் காட்டிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மோதல் நடவடிக்கைகளிற்கும் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.ஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகவே இவற்றை கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர 6.2 பில்லியன் செலவில் கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படக்கூடிய ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி நடவடிக்கைகளிற்காக 4.8 மில்லியன் செலவில் அறு ஹெலிக்கொப்டர்களையும்,மிக முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்திற்காக 11.48 பில்லியன் இரு பெல் 416 ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் இலங்கை விமானப்படையிடம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் ஊடாகவே இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் யுத்தம் நிறைவடைந்த நாடு ஒன்று, பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் இவ்வளவு பெருந்தொகைப் பணத்திற்கு யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்ய முயலுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது