அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 481 ஓட்டங்களைப் பெற்று தனது முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 92 பந்துகளில் 147 ஓட்டங்களுடனும ஜானி பைர்ஸ்டோ 139 ஓட்டங்களும் பெற்றிருந்தனர்.
இதற்கு முன்பு 2016இல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்கள் எடுத்திருந்ததே உலக சாதனையாக இருந்தது. அந்தப் போட்டியும் இதே மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவதற்கு 27 பந்துகள் இருக்கும்போதே, 45.3 ஓவர்களில் 446 ஓட்டங்களைப் பெற்று முந்தைய உலக சாதனை முறியடிக்கப்பட்டது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 242 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக அலெக்ஸ் ஹேல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.