குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்னார் இயந்திரத்துடன் புதையல் தேடிய இருவரில் ஒருவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்கானர் இயந்திரம் கொண்டு சந்தேகத்திற்கிடமான இருவர் புதையல் தேடுவது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றி வளைப்பை மேற்கொண்டு விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்
இதன்போது ஒருவர் தப்பியோடியதுடன், மற்றுமொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் பயன்படுத்திய சுமார் 50 லட்சம் மதிக்கத்தக்க நவீன ஸ்கானர் இயந்திரமும் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கருவியும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் இன்று(20) கிளிநொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்ற வருவதாகவும் கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொள்கலன் ஒன்று தொடர்பில் காவல்துறையினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு எதுவும் கிடைக்காத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்