குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு எதிராக சுமத்தப்படும் பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமாக நிறுவனத்தின் மனிதவள முகாமைத்துவ பிரிவு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பீனிக்ஸ் டிவுட்டி பிரி நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் மாலாத் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன், ஸ்ரீலங்கன் கெட்றிங் மற்றும் மிஹின் லங்கா விமான நிறுவனங்களில் நடந்த ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊழியர்களுக்கு இந்தியாவின் புதுடெல்லி நீதிமன்றத்தில் சுமார் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லியில் உள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், அலுவலகத்தில் பணிப்புரிந்த சக பெண் ஊழியரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து. அலுவலகத்தில் பணியாற்றி யுவதியை பணியில் இருந்து நீக்கி விட்டு, குறித்த அதிகாரிக்கு வேறு ஒரு நாட்டில் பதவி வழங்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவையில் வர்த்தக வகுப்பில் பயணிக்கும் பெண்களுக்கு சில விமானிகள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் தூர பயணங்களின் போது வர்த்தக வகுப்பில் பயணிக்கும் பெண்களுக்கு கடமையில் இருக்கும் சில விமானிகளால், பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாலத் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.