பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் எதிர்வரும் ஜூலை 16-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். உக்ரைன், சிரியா விவகாரங்களால் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்குமிடையிலான மோதல் தொடர்கின்ற நிலையில் .அமெரிக்கா , ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக ரஷ்யாவும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், புட்டினை மொஸ்கோவில் சந்தித்துப் பேசியபோது இரு தலைவர்களும் ஹெல்சிங்கியில் ஜூலை 16-ம் திகதி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பால் இருநாடுகளிடையே நிலவும் பதற்றம் குறையும் என எதிர்பார்க்கிறோம் எனவும் அமெரிக்காவின் நலனை கருத்திற் கொண்டு புட்டினைச் சந்திக்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் எனவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது நட்புறவை மேம்படுத்த ரஷ்யா தயாராக உள்ளதா என்பதை கண்டறிய முடியும் எனவும் அமெரிக்காவின் நலன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜேர்மனயில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின்போதும் கடந்த நவம்பரில் வியட்நாமில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின்போதும் இரு தலைவர்களும் சந்தித்திருந்தனர். இந்நிலையில் இருவரும் மீண்டும் சந்திக்க உள்ளமையானது உலக வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும் என அமெரிக்க, ரஷ்ய வட்டாரங்கள் தெரிவிக்கினறமை குறிபபிடத்தக்கது.