வங்கி கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையாவை எதிர்வரும் ஓகஸ்ட் 27ம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அவர் நேரில் முன்னிலையாகாவிட்டால் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாவினை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தநிலையில் வெளிநாடு தப்பிச்செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்மையில் இந்திய மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின் கீழ் விஜய் மல்லையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றில் அமுலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. அவரது சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையிலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.