Home இலங்கை வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள்…..

வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள்…..

by admin

கே.கே.எஸ். பெரேரா..

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த ஓசையுடன் வெடிக்கச் செய்யப்பட்டது. காயமடைந்தோருக்கு உதவும் பொருட்டு ட்ரக் வண்டியொன்றில் இராணுவ வீரர்கள் ஸ்தலத்தை வந்தடைந்தனர். கைக்குண்டுகளை வீசியபடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அவர்கள் வழிமறித்து தாக்கப்பட்டனர். 13 இராணுவ வீரர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். தனித்து இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்களில் ஆகக் கூடிய எண்ணிக்கையாக இது பதிவாகியிருந்தது.

கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள் இறுதிச் சடங்குகளுக்கென அடுத்த நாள் (ஜுலை 24) பொரளை கனத்தை மயானத்திற்கு விமானம் மூலம் எடுத்து வரப்பட்ட போது கொழும்பு மாநகரில் தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழித்துவிடப்பட்டதுடன் அவை ஏனைய பிரதேசங்களுக்கும் காட்டுத்தீ போன்று பரவத் தொடங்கின.

அரச பாதுகாப்புப் படையினரின் ஆசீர்வாதங்களுடன் கூலிப்படையினர் கொள்ளையடித்தனர். தீவைத்தல் மற்றும் கொன்றொழித்தல் நடவடிக்கைகளில் ஐந்து நாட்களுக்கு ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் பலரைப் படுகொலை செய்தும், சுமார் 4,800 வீடுகளையும் 1,600க்கும் மேற்பட்ட வியாபார ஸ்தலங்களையும் அழித்தொழித்தும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில், இனக்கலவரங்களில் ஈடுபடுமாறு தனது தொழிற்சங்க ஆட்களை ஏவி விட்டவரும் சிங்கள மேலாண்மைவாதியுமான முன்னாள் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சிறில் மத்தியூ மேற்படி பாவச் செயல்களின் சூத்திரதாரியாக விளங்கியதுடன், அரசாங்கமும் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் நான்கு நாட்களாக வாய் திறக்காத நிலையில் வேடிக்கை பார்த்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இன இணக்கப்பாடானது சிறைச்சாலைகளில் 1983 ஜூன் வரை காணப்பட்டது. வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த அனைத்து சிறைக் கைதிகளும் இனப்பாகுபாடு ஏதுமின்றி ஒன்றாக வசித்து வந்தனர். சிறைக் கைதிகள் ஒருவருக்கொருவர் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள உதவியதுடன் ஒருவரையொருவர் ஒருபோதும் முட்டிமோதியதில்லை.

பனாகொடை இராணுவ முகாமில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குழுவொன்று சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச ஜூரிமார் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்டிருந்த வேண்டுகோளைத் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு 1983 ஜூனில் இடமாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 1983 ஜுலை 23ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்ட செய்தியை வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகள் ஜுலை 24 இல் பத்திரிகைகள மூலம் வாசித்தறிந்ததும் கொதித்தெழுந்தனர். பொரளையில் உள்ள கனத்தை மயானத்திற்கு 13 இராணுவ வீரர்களினதும் உடல்கள் கொண்டுவரப்படும் செய்தியும் அவர்களின் செவிகளுக்கு எட்டின. அந்தக் கொலை வெறி ஆட்டம் 24 ஆம் திகதி இடம்பெற்றபோதிலும், ஊரடங்குச் சட்டம் ஜுலை 25 திங்களன்று பிற்பகல் 3.00 மணியளவிலேயே பிறப்பிக்கப்பட்டது.

ஆமாம்! உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள வெலிக்கடைச் சிறை வளாகத்திற்குள் 53 தமிழ் சிறைக்கைதிகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள ABCD என்ற நான்கு பிரிவுகளில், B3, C3 மற்றும் D3 பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளே இவ்வாறு பரிதாபகரமாக கொல்லப்பட்டனர்.

அனைத்து சிங்கள குற்றவாளிகளும் கீழ்த்தளத்தில் A3 பிரிவில் இருந்தனர். அங்கு எல்லாமாக 16 சிறைப்பாதுகாவலர்கள் கடமையில் இருந்துள்ளனர். ஒவ்வொரு பிரிவுக்குமான நுழைவாயில்களும் இரும்புக் கதவொன்றின் மூலம் அடைக்கப்பட்டிருந்தன. பூட்டப்பட்ட அறைகளைக் கண்காணிக்கவென பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வரவேற்பறையில் இரண்டு பாதுகாவலர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இரண்டு வெவ்வேறு தினங்களில் இந்தப் படுகொலை அரங்கேறியது. சிங்கள சிறைக் கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட முதல் நாள் (ஜுலை 25) தாக்குதலில் 35 தமிழ்க் கைதிகளும், இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போது மேலும் 18 தமிழ்க் கைதிகளும் மூன்று சிறைப் பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை எவருமே குற்றவாளியாகக் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பதில் ஆணையாளரான சீ. டி. ஜான்ஸும் அவரது உத்தியோகத்தர்களும் கொலைவெறிக் கும்பலின் வெறியாட்டத்தை அடக்க முற்பட்ட போதிலும் சுமார் 300 சிங்கள சிறைக் கைதிகள் சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறி வரவேற்பறைக்குள் அவசர அவசரமாக நுழைந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்தாரிகள் B3 மற்றும் D3 பிரிவுகளில் இருந்த தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தனர். எவ்வாறிருப்பினும், A3 பிரிவில் இருந்த கைதிகள் உள்ளே தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருந்தனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் முதல் நாள் நிகழ்ந்த கலவரங்கள் பிற்பகல் சுமார் மூன்று மணியளவில் ஆரம்பமாகின. அங்கு நீர்வேலி வங்கிக் கொள்ளை தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 பேரில், ‘குட்டிமணி’ என ஜெகன், தங்கத்துரை மற்றும் ஒரு சிலரும் அடங்கியிருந்தனர். அவர்கள் B3 இல், ஒரே அறையில் இருந்தனர். ஏனைய 28 தமிழ்க் கைதிகளும் C3 இல் உள்ள அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு வருடத்திற்கு முன்னர் விமானமொன்றைக் கடத்த முற்பட்ட குற்றத்திற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சேபால ஏக்கநாயக்க உள்ளிட்ட ஏ3 இல் இருந்த சிங்களக் கைதிகளே இந்தக் கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒருசில மீற்றர்கள் தூரத்தில் தான், தமிழ் தொழில்வாண்மையாளர்கள், மருத்துவர்கள், மதகுருமார், கல்வியியலாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் ஒருசிலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சி3 பிரிவைப் பாதுகாக்கும் கடமைப்பற்றுள்ள சிங்கள சிறைக்காவலர் ஒருவர் அங்கிருந்த தமிழ்க் கைதிகளிடம் “அவர்கள் உங்களைத் தேடி வந்தால் அது எனது இறந்த உடலைத் தாண்டியே நடக்கும்” என ஆறுதல் கூறியிருந்தார்.

அவர் அறைக் கதவு திறவுகோல்களை மறைத்தும் வைத்திருந்தார். வெலிக்கடையில் நிலைகொண்டிருந்த 4 ஆவது பீரங்கிப்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் ஹத்துருசிங்க ஜான்ஸிடமிருந்து உதவி கேட்டு வந்திருந்த செய்தியைத் தொடர்ந்து ஒருசில ஆயுதம் தரித்த இராணுவத்தினருடன் ஸ்தலத்திற்கு விரைந்தார். அவர்களைக் கண்டதும் கொலைவெறிச் சிறைக்கைதிகள் தமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மேல் மாடிக்கு ஓடினர்.

பதில் ஆணையாளர் ஜான்ஸுக்கு அப்பால், சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பட்ட அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறிதளவில் ஈடுபட்டனர்.

C3 இல் கடமையில் இருந்த சிங்கள் சிறைச்சாலைப் பாதுகாவலரால் ஒருவர் ஒருசில தமிழ்க் கைதிகளைக் காப்பாற்ற முடிந்தது. சிறைச்சாலை ஆணையாளர் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாவது, ‘நான் பிரதி பொலிஸ் மா அதிபர் சுந்தரலிங்கத்துடன் தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அவரால் உதவ முடியவில்லை. அதனையடுத்து, ​ஜெனரல் ஆட்டிகல, பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்ட போது, சிறைச்சாலைகளுக்குள் துருப்பினர் பயன்படுத்தப்படுவதில்லை என அவர் கூறினார்’.

27 இல் ‘கொல்லப்பட்ட 18 பேரில் சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த டொக்டர் இராஜசுந்தரமும் ஒருவராவார். மேற்படி கொலை வெறித்தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைத்தோரில் புனித ஜோன் தேவாலயத்தைச் சேர்ந்த வணபிதாவும் ஒருவராவார். அவர் தனது பயங்கர அனுபவத்தை வலைத்தளமொன்றில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவர் அந்தப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“வானம் முழுவதும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. சப்பல் பிரிவில் இருந்த அரசியல் கைதிகள் மீது தாக்குதலொன்று மேற்கொள்ளப்படுகின்றதென்பதை நாம் விரைவாக உணர்ந்து கொண்டோம். சிங்கள கைதிகள் அனைவரும் திறந்து விடப்பட்டனர். அவர்கள் கையில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு தமிழ்க் கைதிகளை கொலை செய்து கொண்டிருந்தனர். அந்த நாளன்று முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டனர். ஜுலை 26 ஆம் திகதி நாங்கள் இரண்டாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

சப்பல் படுகொலையில் தப்பிப் பிழைத்தோர் முதலாம் மாடியில் உள்ள அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜுலை 27 ஆம் திகதி நாம் தங்கியிருந்த கட்டடத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு வந்த காடையர்கள் பூட்டுக்களை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த நிலையில் எம்மை எமது அறைகளில் இருந்து கூட்டிச் செல்லத் தொடங்கினர். அதிர்ஷ்டவசமாக, அவர்களால் மூன்று அறைகளைத் திறக்க முடியவில்லை என்பதால் ஒன்பது பேரும் தப்பிப் பிழைத்தனர். அவர்கள் உடனடியாகவே பூட்டுக்களை உடைத்தெறிந்த நிலையில் கதவைத் திறந்தனர். டொக்டர் இராஜசுந்தரம் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்ன போதிலும் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். அப்போது அங்கு விரைந்து வந்த இராணுவத்தினர் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

எம்மில் எட்டுப் பேரும் முதலாம் மாடியில் தப்பிப் பிழைத்திருந்த ஏனைய ஒன்பது பேரும் ட்ரக் வண்டியொன்றில் ஏற்றப்பட்டோம். அடுத்த நாள் காலை, வெளியே அழைத்துச் செல்லப்பட்ட நாம் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சிறியரக விமானமொன்றில் ஏற்றப்பட்டோம். அதன் பின்னரே, நாம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்ததை உணர்ந்தோம். இரண்டு மாதங்களின் பின்னர் போக அனுமதிக்கப்பட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த மனிதப்படுகொலைகள் குறித்து 1983 ஓகஸ்ட் 4 ஆம் திகதி, இந்தப் பேரவலத்தை ஏன் தடுக்க முடியாமல் போய் விட்டதென எதிர்க் கட்சியினரால் கேட்கப்பட்ட கேள்விக்கு அப்போதைய பிரதமர் ஆர். பிரேமதாச “சிங்களக் கைதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்” எனப் பதிலளித்தார். (ஹன்சாட் ஓகஸ்ட் 4. 1983 1285)

இந்தப் படுகொலை அரசியல் அதிகாரத்தில் உள்ளோரால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டதொன்றென அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இந்த நாட்டில் 1956/58 என இலக்கலவரங்கள் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளன. அவை குறித்தும் உண்மையான நியாயமான விசாரணை நடத்த அதிகாரிகள் தவறியே இருந்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் B3 மற்றும் D3 பிரிவுகளில் உள்ள அறையில் தற்போதுள்ள கைதிகளுக்கு அந்த ஆவிகளின் அவலக் குரல்கள் கேட்ட வண்ணமே உள்ளன. – நன்றி – கே.கே.எஸ். பெரேரா.. தினகரன்..

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More