மாவீரர் தினம் அனுசரிப்பு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து உயிரிழந்தவர்களை, அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாவீரர் தினத்தில் பொது இடங்களில் ஒன்று கூடி, நினைவு கூருவதற்கு கடந்த எட்டு வருடங்களாக அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளினால் உயிரிழந்த உறுப்பினர்களை அடக்கம் செய்வதற்காக வடக்கிலும் கிழக்கிலும் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை ராணுவத்தினர் அழித்து, அவற்றில் சில இடங்களில் தமது படை முகாம்களையும் அமைத்துள்ளனர்.
அரசாங்கத்தினால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூர்வதென்பது விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையாகும் என்று அரசாங்கம் வர்ணித்திருந்தது.
எனவே, உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர்களாகிய மாவீரர்களை பொது இடங்களாயினும்சரி, மாவீரர் துயிலும் இல்லங்களாயினும் சரி அதற்கு அனுமதி கிடையாது என இறுக்கமான தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனை மீறிச் செயற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமப்வங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாகியதன் பின்னர் முதற் தடவையாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இம்முறை மாவீரர் தினம் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடி சுடர்கள் ஏற்றி உணர்வு பூர்வமாக மாவீரர் தினத்தை அனுசரித்தனர்.
இந்தத் திடீர் மாற்றம் குறித்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் தயா சோமசுந்தரம், இது வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான ஒரு மாற்றம் என தெரிவித்தார்.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஐக்கியம் நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த நினைவுகூரலுக்கான அனுமதி அரசியல் ரீதியாகப் பயனுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
ஆயினும் மாவீரர் தினத்தை இவ்வாறுதான், இன்ன இடத்தில், இன்னின்ன திகதியில்தான் அனுட்டிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுமின்றி மக்கள் தமது கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்றவாறு தமக்குப் பொருத்தமான முறையில் இந்தத் தினத்தை அனுட்டிப்பதற்கு அனுமதியளிக்கப்படுவது முக்கியம் என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்தார்.
BBC