சேலத்தில் எட்டு வழிச்சாலை அமையவுள்ள இடங்களில் விவசாயிகளை போராட்டத்திற்கு தூண்டியதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவரும், இதழியல் பாட மாணவியுமான வளர்மதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 19ம் திகதி சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக அதிகாரிகளால் நிலம் அளக்கப்பட்டபோது, பொதுமக்களுடன் இணைந்து நின்றதற்காக ; வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பிணை வழங்கக் கோரி சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை அவருக்கு பிணை வழங்கப்படதனையடுத்து நேற்றையதினம் வளர்மதி சிறையில் இருந்து விடுதலையானார்.
தன்னைப் போன்றவர்களை கைது செய்ததற்கு காரணம் இனி மக்களுக்காகப் போராடக்கூடாது என்பதே எனத் தெரிவித்த அவர் எட்டு வழிச்சாலை திட்டத்தை தடுக்க மக்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என தெரிவித்துள்ளார்.