2050 ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அடிப்படை மற்றும் திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு விட்டதாக இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது மிகவும் சவால் மிகுந்த பணி எனவும், பல்வேறுபட்ட கருத்துக்களையுடைய மக்கள் குழுவினருடன் மிகவும் பொறுமையுடனும், விழிப்புடனும் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (10) சிங்கப்பூர் வர்த்தக சந்திப்பின் வினாவிடை அமர்வில் கலந்துகொண்ட போது பிரதமர் இக்கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தினை மிகவும் சிறப்பாக விளங்கிக் கொண்டுள்ளமையினால், பொருளாதார, நிதி மற்றும் சமூகக் கேந்திர நிலையமாக இலங்கையை அபிவிருத்தி செய்வது நீண்ட கால இலக்காகக் காணப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை நோக்கமாகக் கொண்ட சமூக ஒழுங்கொன்றை உருவாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் கொள்கையாகும் என சுட்டிக் காட்டிய பிரதமர் எதிர்காலத்தில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகளுடன் காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய ரீதியாக நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் பொருளாதார, கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை வலயங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்திய பிரதமர் , கொழும்பு – கண்டி மற்றும் அம்பாந்தோட்டையை இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பினைச் சூழ வாழும் 9 மில்லியன் மக்களை இலக்;காகக் கொண்டு மேற்கொள்ள முடியுமான முதலீடுகள் தொடர்பாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.