மிகவும் மோசமான சித்திரவதைகளும் துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சித்திரவதைகளுக்கெதிரான சர்வதேச அமைப்பு (Freedom from Torture) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தவிடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி 3 வருடங்களை நிறைவுசெய்கின்ற போதிலும் தொடர்ந்தும் இலங்கையில் இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் சித்திரவதைகளுக்குள்ளான 184 பேருக்கு தாம் உதவி செய்துள்ளதாகவும் இவற்றின் அடிப்படையிலேயே சித்திரவதைக்கு உள்ளான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது
கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிலதிநிதி பென் எமர்சன் தனது பயணத்தின் முடிவில் இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த விடயத்தையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் , நியாயமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொள்ளளுதல் அல்லது ராணுவத்தினரை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது