குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கஞ்சா கலந்த மாவா பாக்கை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று தீர்ப்பளித்தார். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து 70 பக்கற்றுக்களில் பொதியிடப்பட்ட 30 கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப் பொருளை காவல்துறையினர் மீட்டதுடன் அதனை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் 2017ஆம் ஆண்டு இறுதியில் இடம்பெற்றது. அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்தனர். சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.அத்துடன், அவரிடம் மீட்கப்பட்ட மாவா பக்கற்றுக்களை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி பரிசோதனை அறிக்கையைப் பெறுமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
சந்தேகநபர் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் அவருக்கு எதிரான குற்றப்பத்திரம் மன்றினால் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
அதன் போது சந்தேகநபர் சுற்றவாளி என மன்றுரைத்தார். அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் வழக்கை விளக்கத்துக்கு எடுக்க மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை தொடர்ந்து மன்று, சுற்றவாளி என்றால் காவல்துறையினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சான்றுப்பொருள் உமது உடமையிலிருந்து மீட்கப்படவில்லையா? கேள்வி எழுப்பியது.
அதற்கு சந்தேகநபர், எனது உடமையிலிருந்துதான் மீட்கப்பட்டது என பதில் அளித்தார். அதையடுத்து மன்று, அப்படியானால் எப்படி சுற்றவாளி என்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியது அதற்கு சந்தேகநபர்: கஞ்சா போதைப்பொருள் அதில் இருக்கவில்லை. என்றார்.
தொடர்ந்து மன்று இல்லையே. அரச பகுப்பாய்வு அறிக்கையில் கஞ்சா கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பியது. அதற்கு சந்தேக நபர் பதில் அளிக்காது தடுமாறியதை அடுத்து சந்தேகநபரின் பதிலில் அதிருப்தியடைந்த நீதிமன்று, அவர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தது.
எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.